வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் நாட்கள் இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் மழை

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “வெப்பசலனம் காரணமாக இன்று மே 25ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேகமூட்டம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 – 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மிதமான மழை

கடந்த 24 மணி நேரத்தில் க.பரமத்தி (கரூர்) 5 செ.மீ, சின்னக்களார் (கோயம்புத்தூர்) 4 செ.மீ, வீரகனூர் (சேலம்) 3 செ.மீ, ஒகேனக்கல் (தருமபுரி) 2 செ.மீ, உதகமண்டலம் (நீலகிரி) செ.மீ, ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), அப்பர் பவானி (நீலகிரி), சேலம், ஆனைமடுவு அணை (சேலம்), காட்பாடி (வேலூர்) தலா 1 செ.மீ, மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

26.05.2023 முதல் 28.05.2023 வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் இலட்சதீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here