காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறவேற்றுவோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பதவி ஏற்பு

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதலமைச்சராகவும், மாநில தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

தலைவர்கள் பங்கேற்பு

பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் இன்று கோலாகலாமக நடைபெற்ற இந்த விழாவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பருக் அப்துல்லா, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, முதலமைச்சர்கள் நிதிஷ்குமார் (பீகார்), மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு), அசோக் கெலாட் (ராஜஸ்தான்), பூபேஷ் பாகேல் (சத்தீஸ்கர்), சுக்விந்தர்சிங் சுகு (இமாச்சல பிரதேசம்), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட்), பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிச்சயம் நிறைவேற்றுவோம்

விழாவில் பங்கேற்று ராகுல் காந்தி பேசுகையில்; “எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து தலைவர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக கர்நாடக மக்கள் மிகவும் துயரத்தில் இருந்தனர். அது இப்போது முடிவுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட்டு, அன்பு வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாங்கள் 5 உத்தரவாதங்களை கொடுத்திருக்கிறோம். பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம். சொல்வதைச் செய்கிறோம். நாங்கள் அறிவித்த 5 உத்தரவாதங்கள் மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தப்போகிறது. சாதி மத பேதமின்றி அனைவரையும் ஒன்று போல நடத்தியதுதான் வெற்றிக்கு காரணம். ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். கிரக லட்சுமி திட்டத்தின்கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும். இந்த உத்தரவாதம் உள்ளிட்ட 5 உத்தரவாதங்கள் குறித்த அறிவிப்பு, இன்று நடைபெறும் கர்நாடக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வெளியாகும்”. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

வாழ்த்து

முன்னதாக, பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும், துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here