காங்கிரஸ் ஆட்சி மூலம் தெற்கில் ஏற்பட்ட விடியல், நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாபெரும் வெற்றி
கர்நாடக மாநில தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. முதலமைச்சர் பதவிக்கு மூத்த தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை முடிவில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே. சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, பெங்களூருவில் இன்று நடைபெற்ற விழாவில் இருவரும் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.
ஸ்டாலின் டுவிட்
பதவியேற்பு விழாவில் நேரில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும், துணை முதலமைச்சர் சிவகுமாருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; “காங்கிரஸ் ஆட்சி மூலம் தெற்கில் ஏற்பட்ட விடியல், நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவ வேண்டும். மற்ற பகுதிகளுக்கும் விடியல் பரவும் மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசையே இன்று நடந்த பதவியேற்பு விழா” என்று குறிப்பிட்டுள்ளார்.