தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சொத்து பட்டியல் வெளியீடு
DMK FILES என்ற பெயரில் திமுகவின் சொத்து பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியிட்டார். திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து என ஒரு வீடியோ வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை முற்றிலும் மறுத்த திமுக, அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பினர்.
அவதூறு வழக்கு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதலமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின் கீழ் உரிய தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும் என்று எந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை 8 வாரத்துக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.