தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘மோக்கா’
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று (மே 08.,) காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நாளை (மே 9.,) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்த புயலுக்கு “மோக்கா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் நாளை மறுதினம் (மே 10.,) இது முதலில் வடக்கு – வடமேற்கு திசையில் கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவை நோக்கி மே 11 ஆம் தேதி வரை நகரக்கூடும். அதன்பிறகு, இது படிப்படியாக மீண்டு, வடக்கு – வடகிழக்கு திசையில் வங்கதேசம் – மியான்மர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
கனமழை
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகி தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூரில் கனமழை பெய்யும். தமிழகத்தில் மே 1 முதல் தற்போது வரை இயல்பை விட 114% மழை பெய்துள்ளது”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.