ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றுள்ளது.
திணறடிப்பு
16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்களில் நெஹல் வதேரா 64 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்களும், திரிஸ்தன் ஸ்டப்ஸ் 20 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி 139 ரன்கள் சேர்த்தது. இந்த இன்னிங்ஸில் மும்பை அணியால் ஒரேயொரு சிக்சர் மட்டுமே அடிக்க முடிந்தது. சென்னை அணியின் பவுலர்கள் மும்பை பேட்ஸ்மேன்களை திணறடித்து ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.
அசத்தல் வெற்றி
140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. தொடக்க பேட்ஸ்மேன்கள் ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்னும், டெவோன் கான்வே 44 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். குறைவான இலக்கு என்பதால் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் நிதானத்துடன் ரன்களை சேர்த்தனர். அஜிங்யா ரஹானே 17 பந்தில் 21 ரன்னும், அம்பதி ராயுடு 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே 26 ரன்கள் சேர்க்க 17.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த சென்னை அணி, அசத்தல் வெற்றியை பெற்றது.