மதிமுக – திமுக இணைப்பு தொடர்பான திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும் என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
கடும் சாடல்
மதிமுகவில் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு உயர் பதவி வழங்கப்பட்டதிலிருந்தே கட்சிக்குள் அதிருப்தி குரல்கள் எழத் தொடங்கின. வைகோவால் ஈர்க்கப்பட்டு அவர் பின்னால் வந்த சீனியர்கள் பலரும் அவரது இந்த முடிவால் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில் மதிமுக அவைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “மதிமுகவை திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலசிறந்தது. மகனை அரவணைப்பதும், சந்தர்ப்பவாத அரசியலும் எள்ளி நகையாட வைத்துவிட்டது” என கடுமையாக சாடி குறிப்பிட்டிருக்கிறார்.
புறக்கணியுங்கள்
திருப்பூர் துரைசாமியின் இந்த கடிதம் மதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ, “கட்சியின் பொதுக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டியதை பொதுவெளியில் வெளியிடுவது முறையல்ல என்றும் மதிமுக – திமுக இணைப்பு தொடர்பாக துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.