சினிமாவை விட்டு 10 ஆண்டுகள் விலகி இருந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் நடிகை அபிராமி.
விருமாண்டி ஹிட்
குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. தமிழில் வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த அபிராமிக்கு ‘விருமாண்டி’ படத்தின் மூலம் எண்ணற்ற ரசிகர்கள் கிடைத்தனர். ஆனால் அந்த படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு பத்து ஆண்டுகளாக ஒதுங்கி விட்டார். அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு மலையாள படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இடைவெளி தேவைப்பட்டது
தமிழில் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அபிராமி, தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அசோக் செல்வன், ரித்து வர்மா இணைந்து நடித்த இந்த திரைப்படத்தை ரா கார்த்திக் இயக்கியிருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிறகு, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் “ஆர் யூ ஓகே பேபி?” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சினிமாவை விட்டு 10 ஆண்டுகள் ஒதுங்கி இருக்க காரணம் என்ன என்பதை கூறியுள்ளார். அவர் கூறுகையில்,”15 வயதில் நடிக்க வந்த நான் 21 வயது வரை விடாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். பள்ளி படிப்பை கூட சரியாக முடிக்கவில்லை. ஒரு சராசரி பெண்ணாகவும் வாழ முடியவில்லை. இதனால் எனக்கு சற்று இடைவெளி தேவைப்பட்டது. சினிமாவை விட்டு பத்து வருடங்கள் விலகி இருந்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று கூறியுள்ளார் அபிராமி.