இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தட்டி தூக்கிய பிரசாந்த்
1990 ஆம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். செம்பருத்தி படத்தின் மூலம் பல ரசிகர்களை தனதாக்கிக் கொண்டார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவரது சினிமா வாழ்க்கை திருப்புமுனையாக அமைந்தது. திருடா திருடா, ஆணழகன், கல்லூரி வாசல், கிருஷ்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த நடிகர் பிரசாந்திற்கு, 1998 ஆம் ஆண்டு சூப்பர் ஜாக்பாட் ஒன்று அடித்தது என்றே சொல்ல வேண்டும். ஜீன்ஸ் படத்தின் மூலம் உலக அழகி ஐஸ்வர்யா ராய் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு பிரசாந்துக்கு கிடைத்தது. ஜீன்ஸ் படத்திற்குப் பிறகு 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் நாயகனாக மாறிய பிரசாந்த் சாக்லேட் பாயாக சினிமா துறையில் வலம் வந்தார்.
25 ஆண்டுகள் நிறைவு
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர், லட்சுமி, செந்தில், ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஏ.ஆர்.ரகுமான். மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் அந்த ஆண்டிற்கான 71 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவின் கீழ் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட படம் என்ற பெருமையையும் ஜீன்ஸ் திரைப்படம் பெற்றது. இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் கூறி வருகின்றன.