திருச்சியில் நடைபெறும் மாநாட்டுக்கு ஓபிஎஸ் அழைத்தால் அதில் கலந்துகொள்வது குறித்து முடிவு செய்வேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.
இரட்டை வேடம்
சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலா அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்காளிடம் அவர் பேசுகையில்; அதிமுக உட்கட்சி பூசலை திமுக பயன்படுத்தி வருகிறது. அனைவரும் ஒன்று சேர கூடாது என திமுக செயல்பட்டு வருகிறது. ஓபிஎஸ் தீர்மானம் குறித்து பேசுகிறார். உடனடியாக அதிமுகவை சார்ந்த நபர்கள் எப்படி பேச விடலாம் என கேட்கின்றனர். அதற்கு சபாநாயகர் முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில்தான் பேச சொன்னேன் என கூறினார். அவர் அதிமுக அதனால் பேச சொன்னேன் என கூறவில்லை. ஓபிஎஸ் விவகாரத்தில் சட்டசபையில் திமுக இரட்டை வேடம் போடுகின்றனர்.
நிச்சயம் சந்திப்பேன்
ஆட்சியை மக்கள் கொடுத்த பின் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். ஆனால் திமுக ஆட்சி அமைத்தது முதல் ஏதோ சந்தைக்கு போவது போல ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகின்றனர். மக்களுக்காக வந்த அரசாக இந்த அரசு தெரியவில்லை. கொடநாடு வழக்கை திமுக அரசியலுக்காக பயன்படுத்துகிறது. வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க நேரம் கேட்டால். நிச்சயம் சந்திப்பேன். ஓபிஎஸ் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால், அதன்பின் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்வேன். பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அதிமுகவை ஒன்றிணைக்கும் பணி முடியும். நான் ஜாதி அரசியல் செய்யவில்லை”. இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.