ராகவா லாரன்ஸ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை ரிலீசாக உள்ளது.
நாளை ரிலீஸ்
ராகவா லாரன்ஸ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ருத்ரன். கதிரேசன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அப்போது விழா மேடையில் 150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களது கல்விக்கு உதவுவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அதேபோல், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய Kpy பாலா தனது செலவில் பல குழந்தைகளை படிக்க வைத்து வருவதை அறிந்த ராகவா லாரன்ஸ், பாலாவிற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவியும் வழங்கினார். ருத்ரன் திரைப்படத்தை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.
தடை நீக்கம்
இந்நிலையில், வடஇந்திய மொழிகளின் டப்பிங் உரிமைக்காக எழுந்த பிரச்சினையால் ரெவென்சா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ருத்ரன் திரைப்படத்தை 24ஆம் தேதி வரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் குழு படத்தின் மீதான தடையை நீக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் இப்படம் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியாக உள்ளது.