ஐபிஎல் போட்டியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல பிரபலங்கள் நேரில் பார்த்து ரசித்தனர்.
200வது போட்டி
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியானது சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு 200-வது போட்டி என்பதால் ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களும் இதனை ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். இந்த கிரிக்கெட் போட்டியை நேரில் பார்ப்பதற்காக பல பிரபலங்கள் ஒன்று கூடி இருந்தனர்.
ஒன்று கூடிய பிரபலங்கள்
நடிகர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிஎஸ்கே அணியின் டி-ஷர்ட் அணிந்து மைதானத்திற்கு வந்திருந்தார். மேலும் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சதீஷ், நடிகை த்ரிஷா உள்ளிட்ட பலரும் இந்த போட்டியை நேரில் கண்டு ரசித்தனர். இதில் லோகேஷ் கனகராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது. இவர்களுடன் இணைந்து நடிகைகள் பிந்து மாதவி, மேகா ஆகாஷ், நடிகர் ஜெயராம் உள்ளிட்ட பலரும் இந்த போட்டியை நேரில் கண்டு ரசித்தனர். தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் எல்.ஜி.எம் படத்தின் குழுவினர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் கண்டு ரசித்தனர். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி திரைப்படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அப்படத்தை புரமோட் செய்யும் விதமாக அப்படக்குழுவினர் சொப்பன சுந்தரி என எழுதப்பட்ட டீசர்ட் அணிந்து வந்து ஐபிஎல் போட்டியை கண்டு களித்தனர்.















































