ஜெயம் ரவி, ஜெனிலியா நடிப்பில் உருவான ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வெற்றி படம்
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜெயம் ரவி, ஜெனிலியா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’. 2008ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜெயம் ரவி கெரியருக்கு இந்த திரைப்படம் முக்கிய படமாக அமைந்தது. 2003ம் ஆண்டு ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜெயம் ரவிக்கு, எம்.குமரன் s/o மகாலட்சுமி, தாஸ், மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி உள்ளிட்ட திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி படங்களாக அமைந்ததால் ஆரம்பத்தில் இருந்தே முன்னணி நடிகராக வலம் வந்தார்.

15 ஆண்டுகள் நிறைவு
எப்பொழுதும் குடும்ப பாங்கான கதைகளில் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஜெயம் ரவிக்கு ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ திரைப்படம் மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது. இப்படத்தில் ஜெனிலியாவின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் இன்றும் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.















































