சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி இசை கச்சேரியிலும் கலக்கி வரும் நடிகை ஆண்ட்ரியா ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு நாடு செல்வதாக கூறியிருக்கிறார்.
பன்முக திறமையாளர்
கண்ட நாள் முதல் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியாவுக்கு, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா நடித்த இந்த திரைப்படத்தில், ஆண்ட்ரியா தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். முன்னணி கதாபாத்திரத்தில் இவர் நடித்த முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதும், அடுத்தடுத்து வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார் நடிகை ஆண்ட்ரியா. தரமணி, வடசென்னை போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக முத்திரை பதித்துக் கொண்டார்.
அடுத்தடுத்த படங்கள்
தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பல படங்கள் வெளிவர தயாராக உள்ளது. அதில் பிசாசு 2 திரைப்படமும், கா, மாளிகை போன்ற திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து வெளிவரும் கட்டத்தில் உள்ளது. அதன்பிறகு, பாபி சிம்ஹாவுடன் ஒரு படமும், தினேஷ் செல்வராஜ் இயக்கும் படத்திலும் தற்போது நடித்து வரும் ஆன்ட்ரியா, “நோ என்ட்ரி” படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நோ என்ட்ரி படத்தில் ஆண்ட்ரியா உடன் இணைந்து பிரதாப் போத்தன், ரம்யா ராவ், ஆதவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அழகு கார்த்திக் இயக்கும் இந்த திரைப்படம் திரில்லர் கதை அம்சம் உள்ள படமாக உருவாகியுள்ளது.
கச்சேரியில் பிஸி
பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. சமீபத்தில் அவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் இந்திய அளவில் ஹிட் ஆனது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா, இசைக் கச்சேரிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் இப்போது பாரிஸில் நடந்த இசைக் கச்சேரியில் பாடல் பாடி, நடனம் ஆடி கலக்கியுள்ளார். அது சம்மந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ளார்.















































