கர்நாடக சட்டசபை தேர்தல் முடியும் வரை கிச்சா சுதீப் படங்களுக்கு தடை விதிக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பல படங்களில் கமிட்மென்ட்
கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய கிச்சா சுதீப், பல படங்களில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புகழ்பெற்றவர் கிச்சா சுதீப். “நான் ஈ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். பாகுபலி, புலி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார் கிச்சா சுதீப்.
படங்களுக்கு தடை
கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடக்க உள்ள நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதாக நடிகர் சுதீப் அறிவித்தார். முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தனக்கு கஷ்ட காலத்தில் உதவியதாகவும், அதனால் அவர் எந்த தொகுதியில் எல்லாம் தேர்தல் பிரச்சாரம் செயயும்படி சொல்கிறாரோ, அந்த தொகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறினார். இதனால் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், தேர்தல் முடியும் வரை சுதீப் திரைப்படங்களை திரையிட தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தேர்தல் நடைமுறை விதிகளை கருத்தில் கொண்டு மே 13ஆம் தேதி வரை கிச்ச சுதீப் படங்கள் திரையிட அனுமதிக்க கூடாது என்றும் சுதீப் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.