நடிகை வாணி போஜன் பேச்சுலர் பட வாய்ப்பை நழுவவிட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்ய பாரதி நடிப்பில் வெளியான பேச்சுலர் திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக பேச்சுலர் ஆண்களுக்கு இந்த படம் பிடித்த படமாக அமைந்தது. சதீஷ் செல்வகுமார் இயக்கிய இந்த படத்தில், பல நெருக்கமான காட்சிகளும், ஆபாச வசனங்களும் இடம் பெற்று இருந்தது. அதனாலேயே இப்படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. முதல் படத்திலேயே தனது அபாரமான நடிப்பால் பல இளைஞர்களின் மனதில் இடம்பெற்றார் நடிகை திவ்ய பாரதி.
நழுவவிட்ட வாய்ப்பு
பேச்சுலர் படத்தில் திவ்ய பாரதி நடிப்பதற்கு முன், இந்த வாய்ப்பு நடிகை வாணி போஜக்கே கிடைத்துள்ளது. ஓர் இரவு என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை வாணி போஜன், ஓ மை கடவுளே படத்திற்கு பிறகுதான் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான லாக்கப், மலேசியா டு அம்னீசியா உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் தான் பேச்சுலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆனால் இப்படத்தில் வாணி போஜன் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார்.
கவனமாக இருந்தேன்
நடிகை வாணி போஜன் இதுகுறித்து கூறி இருப்பதாவது, “பேச்சுலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு முதலில் வந்தது. ஆனால் இந்த படத்திற்கு நான் செட்டாவேனா என்று எனக்கு யோசனையாகவே இருந்தது. மேலும் இதுபோன்ற கதைகளில் நடித்தால் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்களா? என்ற கேள்வியும் எனக்குள் இருந்தது. பல நெருக்கமான காட்சிகளும் இப்படத்தில் இருப்பதால் நான் கொஞ்சம் யோசித்தேன். ஒருவேளை நான் ஓகே சொல்லி இருந்தால், இயக்குநர் எனக்காக படத்தில் சில காட்சிகளையும் மாற்றி இருப்பார். எனக்காக எந்த காட்சிகளையும் இயக்குநர் மாற்றக்கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். அதனால் தான் இந்த படத்தில் இருந்து நான் விலகிவிட்டேன்” என்று நடிகை வாணி போஜன் கூறியுள்ளார்.
பல படங்களில் பிஸி
வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் நடிகை வாணி போஜன், தற்போது பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். வாணி போஜன் நடிப்பில் தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு, தாழ் திறவா, லவ், வித்தாரத்துடன் பெயர் வைக்காத ஒரு படத்திலும் நடித்து முடித்துள்ளார். கிட்டத்தட்ட ஆறு படங்களுக்கு மேல் நடித்து முடித்துள்ள வாணி போஜன், ஊர்க்குருவி, ஆர்யன் உள்ளிட்ட படங்களின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.