வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக கேரளா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அம்மாநில அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வைக்கம் விழா

கடந்த 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி சமூக நீதிக்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும் கேரளாவில் வைக்கம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தை தந்தை பெரியார் முன்னின்று நடத்தியதால், அவர் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை கேரளா அரசு விமரிசையாக கொண்டாட உள்ளது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

வரவேற்பு

இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் கேரளா புறப்பட்டார். கொச்சின் விமான நிலையம் சென்ற முதல்வருக்கு அம்மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் சால்வை அணிவித்து வரவேற்றார். இதனையடுத்து சாலை மார்க்கமாக குமரகம் செல்லும் மு.க.ஸ்டாலின், தனியார் நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்க உள்ளார். பிற்பகல் 3 மணிக்கு விடுதியில் இருந்து முதலமைச்சர் வைக்கம் செல்கிறார். அங்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். பின்னர், நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் இரண்டு மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர். 

திடீர் சந்திப்பு

இதனிடையே கேரளா செல்லும் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நடிகை ரோகினி சந்தித்து நலம் விசாரித்தார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க எனக்கு ஓரு வாய்ப்பு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here