ரோகிணி திரையரங்கில் பத்து தல திரைப்படம் பார்க்க வந்த நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காத சம்பவத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மறுப்பு – விளக்கம்
சென்னை ரோகிணி திரையரங்கில் பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர் இன மக்ககளை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து திரையரங்க நிர்வாகம் சார்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், “பத்து தல படத்தை அதிகாரிகள் யு/ஏ தணிக்கை செய்தது எங்களுக்கும் தெரியும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சட்டப்படி U/A சான்றிதழ் பெற்ற எந்தத் திரைப்படத்தையும் பார்க்க அனுமதிக்க முடியாது. 2, 6, 8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பத்தினருக்கு எங்கள் டிக்கெட் சோதனை ஊழியர்கள் இந்த அடிப்படையில் அனுமதி மறுத்துள்ளனர்” என்று கூறப்பட்டது. மேலும் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டது.
விசாரணை
இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர்களிடம் மாநில மனித உரிமை ஆணையத்தின் அதிகாரி எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் விசாரணை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்காக சென்னை, ரோகிணி திரையரங்கத்தின் வளாகத்திற்கு பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 4 பேர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக ரோகிணி திரையரங்க உரிமையாளரிடமும் விசாரணை நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டது.
நிச்சயம் பேசுவேன்
இதனிடையே, சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இச்சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் நிச்சயம் இதுகுறித்து பேசுவேன் என்றும் கூறியுள்ளார்.