கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணத்தால் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் பரவல்

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்; இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்று 3 ஆயிரத்து 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 123 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகமாக உள்ளது. தமிழகத்தில் குறைவாக இருந்தாலும் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்திட தீவிர கவனம் செலுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

முகக்கவசம் கட்டாயம்

பொதுவாக எந்த நோய் தொற்றாக இருந்தாலும் பெரும்பாலும் மருத்துவமனைகளில் இருந்தே பரவும். எனவே தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் அரசு மருத்துவமனைகளிலும் நாளை முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், உள் நோயாளிகள் மருத்துவமனையின் அனைத்து நிலை ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களிலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது”. இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here