ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் மொத்தம் எவ்வளவு மதிப்பிலான பொருட்கள் காணவில்லை என்ற குழப்பத்தில் போலீஸ் அதிகாரிகள் உள்ளனர்.
விசாரணையில் வாக்குமூலம்
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது வீட்டில் லாக்கரில் இருந்த தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் தனது வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் ஈஸ்வரியை விசாரித்த போலீசார், ஐஸ்வர்யா வீட்டில் இருந்து நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருடியதை ஒப்புக்கொண்டார். திருடிய அனைத்தையும் நகை கடையில் விற்றதாகவும் வாக்குமூலம் கொடுத்தார் ஈஸ்வரி.
விசாரணையில் குழப்பம்
மேலும் திருடிய பொருட்களை விற்ற பணத்தில் சோழிங்கநல்லூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சொந்த வீடு ஒன்று வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. தன் கணவருக்கும் தெரியாமல் இந்த வேலையை செய்த ஈஸ்வரி, ஐஸ்வர்யாவின் பினாமி என்றும் வெளியே கூறியுள்ளார். இதைதொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் இருவரிடமிருந்து 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. அது மட்டுமில்லாமல் ரூ.9 லட்சம் மதிப்பிலான நிலமும், தனது கணவருக்கு காய்கறி கடை, மகளுக்கு மளிகை கடை, இன்னொரு மகளுக்கு திருமணம் என்று அனைத்தையும் செய்து வைத்திருப்பதும் விசாரணையில் வெளிவந்தது. இதில் என்ன குழப்பம் என்றால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காணாமல் போனதாக கூறியதை விட அதிக அளவில் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் ஐஸ்வர்யா வீட்டில் மொத்தம் எவ்வளவு மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளது என்பதை விசாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் போலீஸ் அதிகாரிகள். வீட்டில் உள்ள பொருட்களின் மதிப்பும், திருடு போன பொருட்கள் மதிப்பு கூட ஐஸ்வர்யாவுக்கு தெரியாதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.