கோவை அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காட்டு யானைகள்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூர் வனப்பகுதியை ஓட்டியுள்ள பகுதிகளில் வழக்கமாக காட்டு யானைகள் உணவு தேடி வந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லும். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இதேபோல் பூச்சியூர் பகுதிக்கு காட்டு யானைகள் வந்துள்ளது. அதில் அதிகாலையில் குறுவம்மா கோவில் அருகே உள்ள பட்டா நிலத்திற்குள் ஒரே ஒரு ஆண் யானை மட்டும் புகுந்துள்ளது.

மின்சாரம் பாய்ந்து பலி

இதையடுத்து அங்கிருந்த வன ஊழியர்கள் காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றுள்ளனர். அப்போது யானை வனப்பகுதிக்குள் ஓடிய போது, இடையே இருந்த மின்கம்பத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் மின்கம்பம் முறிந்து யானை மீது விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே யானை உயிரிழந்தது.

தொடரும் சோகம்

தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் மின்துறை ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இறந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திறகு விரைந்துள்ளனர். கடந்த 7 நாட்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து காட்டு யானை உயிரிழந்த நிலையில், மீண்டும் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here