சினிமாவில் பல மாற்றங்கள் வந்துவிட்டதாகவும் தனது சினிமா அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகை ரெஜினா கசான்ரா.
தாமதமாகும் படங்கள்
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசான்ரா. பின்னர் ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது பார்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரெஜினா, தமிழில் எதிர்பார்த்த அளவு ஹிட் கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 
பல அனுபவங்கள்
பார்டர் படத்தில் அருண் விஜயுடன் இணைந்து ரெஜினா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்டெபி பட்டேல் நடித்துள்ளார். இயக்குநர் அறிவழகன் இப்படத்தை இயக்க, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். அருண் விஜய் ஏற்கனவே இயக்குநர் அறிவழகனுடன் இணைந்து குற்றம் 23 படத்திலும், தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரிலும் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருந்தது. பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தது படக்குழு. இந்நிலையில் இன்று வெளியாகும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது இந்த தேதியும் மாற்றப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா நடித்துள்ள சூர்ப்பனகை படமும், காஜல் அகர்வாலுடன் நடித்துள்ள கருங்காப்பியம் படமும் தொடர்ந்து தாமதமாகி வருவதால் பெரிதும் கவலையில் உள்ளார் நடிகை ரெஜினா. 
எல்லாம் மாறிடுச்சு
இந்நிலையில் சினிமாவில் தனக்கு கிடைத்த அனுபவத்தை பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் நடிகை ரெஜினா. அவர் கூறியிருப்பதாவது, “நான் சினிமாவுக்கு வந்த சமயத்தில் இருந்த நிலைமைகள் வேறு. இப்பொழுது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. நான் சினிமாவுக்கு வந்து 12 வருடங்கள் ஆகிறது. சினிமா வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை எதிர்கொண்டேன். பல நல்ல விஷயங்களையும், கெட்ட விஷயங்களையும் கற்றுக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.















































