படப்பிடிப்பின் போது காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நடிகர் அமிதாப்பச்சன் தான் குணமடைய பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பிரம்மாண்ட படம்
1960களில் நடிக்க துவங்கிய நடிகர் அமிதாப்பச்சன் இன்று வரை இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் “ப்ராஜெக்ட் கே” என்ற படத்தில் நடித்து வருகிறார் அமிதாப் பச்சன். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாதில் நடந்து வருகிறது. சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை அஸ்வின் தத் தயாரிக்கிறார்.
விலா எலும்பு முறிவு
“ப்ராஜெக்ட் கே” படத்தின் படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு நடிகர் அமிதாப்பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தில் அமிதாப்பச்சனுக்கு விலா எலும்பு பகுதி உடைந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு விரைவாக சிகிச்சையும் அளிக்கப்பட்டது. தற்போது மும்பையில் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அமிதாப்பச்சன், தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; “நான் உடல் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நான் நன்றாக இருக்கிறேன். விரைவில் பூரண குணமடைவேன் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.