தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 20-ம் தேதி வரை இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 20ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 21ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேகமூட்டம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆலங்கட்டி மழை
இதனிடையே, அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிந்துள்ளது. சென்னை வேளச்சேரியில் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. சென்னையில் பெய்து வரும் மழையால், மாநகரம் முழுவதும் சில்லென்ற காற்று வீசுகிறது.