பிளஸ்-2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது குறித்து ஆய்வு செய்யப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
முக்கிய ஆலோசனை
பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தேர்வு எழுத வராத 50 ஆயிரத்து 674 மாணவர்களின் படிப்பை மீண்டும் தொடர வைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து அமைச்சர் கருத்து கேட்டார். தேர்வு எழுத முன்வராத காரணத்தை ஒவ்வொரு மாணவரிடமும் கேட்டறிய வேண்டும் என்றும் இதற்காக அவர்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஏன் ஆப்சென்ட்
இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில்; பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப்பள்ளி மாணவர்கள் 38,000 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 8,500 பேரும், தனியார் பள்ளி மாணவர்கள் 1,500 பேரும் முதல்நாள் தேர்வை எழுதவில்லை. தேர்வின் அவசியத்தை மாணவர்களுக்கு அறிவுறுத்தி பெற்றோர்கள் தேர்வெழுத அனுப்பி வைக்க வேண்டும். அனைத்து மாணவர்களையும் தேர்வெழுத வைக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்படுகிறோம். பிளஸ்-1 பொதுத்தேர்வை ரத்து செய்ய வாய்ப்பில்லை. பிளஸ்-2 பொதுத்தேர்வில் எதனால் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆனார்கள் என ஆய்வு செய்யப்படும். மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து மாவட்டம் வாரியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வராதது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் ஆய்வு செய்ய வேண்டும்”. இவ்வாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.