கண்ணாடி முன்னால் நின்று என்னைப் பார்க்கும்போது, மிகவும் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கிறேன் என்ற எண்ணம் ஏற்பட்டால் போதும் மற்றவர்களுக்காக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.

ஸ்லிம் அண்ட் ஸ்டைல்
2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கொண்டு வந்தவர் ராஷ்மிகா மந்தனா. டியர் காம்ரேட் படத்திலும் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. தமிழ் பக்கம் நடிக்க மாட்டாரா என்று ஏங்கும் அளவிற்கு தனது ஸ்லிம் மற்றும் ஸ்டைலால் ஏங்க வைத்தார் ராஷ்மிகா. சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். சுல்தான் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அந்த படம் வரவேற்பை பெறவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் தனது நடிப்பை நிரூபித்தார் ராஷ்மிகா மன்தனா.

அழகுக்கும், திறமைக்கும் முக்கியத்துவம்
சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து அசத்தினார் ராஷ்மிகா. தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் இவர் தனது அழகின் ரகசியம் குறித்து கூறியுள்ளார். இதுதொடர்பாக ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளதாவது; “எல்லோரிடமும் ஒவ்வொருவிதமான அழகு இருக்கிறது. கண்ணாடி முன்னால் நின்று என்னைப் பார்க்கும்போது மிகவும் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கிறேன் என்ற எண்ணம் ஏற்பட்டால் போதும். எப்போதுமே நான் அப்படித்தான் நினைப்பேன். மற்றவர்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். அழகுக்கு உதாரணமாக யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சிலர் சற்று பருமனாக இருப்பதை அழகு என்று சொல்வார்கள். அப்படிப்பட்டவர்கள் யாருக்காகவும் தங்கள் உடல் வடிவத்தை மாற்றிக்கொள்வதற்கான அவசியம் இல்லை. தொடர்ந்து ஆறு மாதங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பது உறுதி. என்னைப் பொறுத்தவரை ஒரு உடற்பயிற்சியாளரை நியமித்து, அவரது ஆலோசனைப்படி நடக்கிறேன். இதன்மூலம் எனது கட்டுக்கோப்பான உடல் தோற்றத்தைக் காப்பாற்றி வருகிறேன். திரைத்துறையில் அழகுக்கும், திறமைக்கும் மட்டுமே அதிக முக்கியத்துவம் தரப்படும்” என்று கூறியுள்ளார்.















































