எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆசோசனை நடத்தி வருகிறார்.
சட்ட போராட்டம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக பல பிரிவாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக யாருக்கு சொந்தம் என ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் ஏற்பட்டு நீதிமன்றங்களில் சட்டப் போராட்டமும் நடத்தப்பட்டது. அதேநேரத்தில் ஜூலை பதினொன்றாம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அதிமுக சட்ட விதிகளும் மாற்றி அமைக்கப்பட்டது.
முக்கிய ஆலோசனை
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூலை பதினொன்றாம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் எனக் கூறி உத்தரவிட்டது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்தது. இதனையடுத்து பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிமுக தலைமை தொடங்கியது. இதற்காக மாவட்ட செயலாளர்களிடம் ஒப்புதல் பெறுவதற்காக இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஒப்புதலோடு தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாகவும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுப்பது குறித்தும் முடிவெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.