ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் பிப்ரவரி 27-ம் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட 77 பேர் களம் கண்டனர்.
முன்னிலை
இந்த நிலையில், 27-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஈரோடு சித்தோடு கல்லூரியில் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இதனை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
திராவிட மாடலுக்கு அங்கீகாரம்
இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; “மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மிகப்பெரிய மகத்தான வெற்றியை தேடித் தந்திருக்கிறார்கள். 20 மாத திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரச்சாரத்தில் 4-ம் தர பேச்சாளர் போல் பேசிய பேச்சுக்கு மக்கள் நல்ல பாடத்தை வழங்கியுள்ளனர்” என்றார்.