உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் பிரபு உடல் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளார்.
கலக்கல் படங்கள்
1980 மற்றும் 90 களில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் பிரபு. தற்போது பல படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில் கூட இவர் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். 66 வயதாகும் அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஓய்வு
சிறுநீரக பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் பிரபுவுக்கு, மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து யூரித்ரோஸ்கோபி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கல் அகற்றப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரபு முழு உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துனர். ஓரிரு நாளில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து சிகிச்சை பெற்று வந்த பிரபு, தற்போது உடல் நலம் பெற்றதை அடுத்து வீடு திரும்பி இருக்கிறார். வீட்டில் சில தினங்கள் ஓய்வெடுத்துவிட்டு, அதன் பின்னர் வழக்கம் போல் படப்பிடிப்பில் பிரபு கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.