கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் வருகிற 27-ம் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆன்ந்த் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.
தீவிர வாக்கு சேகரிப்பு
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உட்பட அமைச்சர்கள், திமுக பிரமுகர்கள் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுக்கு ஆதரவாக கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடித்தளம்
ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஈரோடு சம்பத் நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் பேசியதாவது; கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு. சம்பத் நகரில், ஈவிகேஎஸ் சம்பத் மகனுக்கு வாக்கு சேகரிக்க கலைஞர் மகன் வந்துள்ளேன். திமுகவின் அடித்தளமே ஈரோடு தான். மகனின் கடமையை செய்து முடிக்க தந்தை வந்துள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவுக்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே எனது லட்சியம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.