வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் தமிழகத்தில் நுழைந்துள்ளதால் தமிழக இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

மோதல்

வடமாநிலங்களில் இருந்து தமிழகத்தை நோக்கி நாள்தோறும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பிற்காக வருகின்றனர். குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த நிலையில், அண்மைக் காலமாக தமிழர்களுக்கும், வடமாநிலத்தவருக்கும் மோதல்கள் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், திருப்பூரில் உள்ள கம்பெனியில் தமிழர்களை வடமாநில இளைஞர்கள் அடித்துவிரட்டினர். நேற்று முன் தினம் கோவையில் உள்ள கல்லூரியில் நுழைந்து தமிழக மாணவர்களை  வடமாநிலத்தவர் தாக்கினர்.

அச்சம், கவலை

இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள  நிலையில், வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறிய செயல்கள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறிய செயல்கள் அதிகரித்துவருவது பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. பல்வேறு தொழில்களில் வடமாநிலத்தவர் உள்ளிட்ட பிற மாநில தொழிலாளர்களை நியமிப்பது அதிகரிப்பதால் தமிழக இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோகின்றன. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்கவும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு நிபுணர் குழுவை அமைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும்.அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here