விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நான்கு நிமிட ஸ்னீக் பீக் டிரைலரை படக் குழுின்று மாலை வெளியிட உள்ளது.
பன்முக திறமையாளர்
சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமா துறைக்கு அறிமுகமான விஜய் ஆண்டனி ஹீரோவாகவும் வெற்றி பெற்றுள்ளார். இசையமைப்பாளராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும், தமிழ் சினிமாவை மிரட்டி வருகிறார் விஜய் ஆண்டனி என்று சொன்னால் அது மிகையாகாது. நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி, தனது முதல் படத்திலேயே திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அந்த வெற்றிக்கு பிறகு பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.
அசத்தல் நடிப்பு
2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் விஜய் ஆண்டனியின் மார்க்கெட்டையே திருப்பி போட்டது, சசி இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் லாபத்தை பெற்று தந்தது. அந்த படத்திற்குப் பிறகு சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன் என்று பல படங்களில் நடித்த விஜய் , தற்போது பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் போன்ற படங்களின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி போன்ற படங்கள் வெளிவர இருக்கின்றது.
ஷூட்டிங்கில் விபத்து
பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்தை இயக்கிய சசியே பிச்சைக்காரன் 2 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே சினிமாத்துறையில் பல பரிமாணங்களை கொண்டுள்ள விஜய் ஆண்டனி, இந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். பிச்சைக்காரன் 2 படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் மலேசியாவில் நடந்தது. படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தனது உடல்நலம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவும் வெளியிட்டு இருந்தார்.
அப்டேட் ரெடி
இந்நிலையில், தற்போது பிச்சைக்காரன் 2 படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “பணம் உலகை காலி பண்ணிடும்” என்ற வாசகத்தோடு, பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நான்கு நிமிடம் ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் வெளிவர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.















































