சென்னையில் ஏன் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை என ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரசிகர் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்துள்ள பதில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
குவியும் விருதுகள்
ஆரம்ப காலத்தில் இளையராஜாவுடன் உதவியாளராக இருந்து பல விளம்பர படங்களிலும் இசையமைத்து வந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஏ.ஆர்.ரஹ்மான், தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார். அன்று முதல் பல படங்களில் இசையமைத்து தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பதித்துக் கொண்ட அவர், பாலிவுட்டிலும் வெற்றிகளை கொடுத்து உலகம் முழுவதும் பிரபலமானார். இசையமைத்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆக ஏ.ஆர்.ரஹ்மானின் மார்க்கெட்டும் அதிகரித்தது.
பல படங்கள் கைவசம்
தமிழ் மற்றும் ஹிந்தி படங்களுக்கு இசையமைத்திருந்த ஏ.ஆர்.ரஹ்மாக்கு, ஸ்லம்டாக் மில்லியனர் படம் மூலம் ஹாலிவுட்டில் இசையமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தமிழில் எப்படி முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கினாரோ, அதேபோல் அங்கேயும் முதல் படத்திலேயே 2 தேசிய விருதை தட்டிச் சென்றார். சமீபத்தில் இவர் இசையமைத்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பத்து தல, மாமன்னன், பொன்னியின் செல்வன் 2, அயலான் என அடுத்தடுத்து தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
தொடரும் குழப்பம்
இசைப்பணிகள் எவ்வளவு இருந்தாலும் வெளிநாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசை நிகழ்ச்சி நடக்கப்போகிறது என்று தெரிந்தவுடன் கோடிக்கணக்கில் டிக்கெட்கள் விற்றும் தீர்க்கின்றன. தொடர்ந்து வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் இவர், தமிழ்நாட்டில் ஏன் இசை நிகழ்ச்சி நடத்துவதில்லை என்ன ரசிகர்கள் மனதில் கேள்வியாக இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர் ஒருவர் டுவிட்டரில், “சார், சென்னை என்றொரு நகரம் இருக்கிறது நினைவு இருக்கிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். அதைப் பார்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அதனை தனது டுவிட்டரில் பகிர்ந்து “பர்மிஷன்ஸ் பர்மிஷன் பர்மிஷன்ஸ் 6 மாத ப்ராசஸ்” என்று பதிவிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருக்கும் இந்த பதில் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கொடுக்க ஆறு மாத காலம் ஆகுமா? என்று ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர்.