உருவ கேலிகள் தன்னை மிகவும் பாதித்ததாக இளம் நடிகை திவ்ய பாரதி தெரிவித்திருகிறார்.
இளம் நடிகை
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் திவ்ய பாரதி. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. பிக்பாஸில் பிரபலமான முகின் ராவ்வுக்கு ஜோடியாக “மதில் மேல் காதல்” என்கிற படத்தில் திவ்ய பாரதி நடித்துள்ளார். ஒருசில வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.
உருவ கேலி
இந்நிலையில், நடிகை திவ்ய பாரதியை சிலர் சமூக வலைதளத்தில் உருவகேலி செய்வதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “சமீபகாலமாக நான் உருவக்கேலிகளை எதிர்கொண்டு வருகிறேன். எனது உடல் தோற்றம் போலியானது என்றும், எனது இடுப்பு பகுதியில் பேடுகள் வைத்திருக்கிறேன் என்றும், என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்து இருக்கிறேன் என்றும் கேலி செய்கிறார்கள். நான் எலும்பு கூடுபோல் இருப்பதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர். கல்லூரி நாட்களிலும் பலர் என்னை உருவக்கேலி செய்துள்ளனர். இந்த கேலிகள் என்னை மிகவும் பாதித்தது. எனது உடலை வெறுக்கும்படியும் செய்தது. மாடலிங்கில் நுழைந்து எனது படங்களை வலைத்தளத்தில் வெளியிட ஆரம்பித்ததும் அதை பார்த்து என் உடல் அமைப்பை பாராட்டினர். இது எனக்கு தைரியத்தை கொடுத்தது. ரசிப்பவர்களும், வெறுப்பவர்களும் எப்போதுமே இருக்கிறார்கள். விமர்சனங்களை பொருட்படுத்தாதவரை நாம் வலிமையாகவும், அன்பாகவும் இருப்போம்” என்றார்.