‘மாண்டாஸ்’ புயல் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.
‘மாண்டஸ்’ புயல்
வங்கக் கடலில் உருவாகி உள்ள ‘மாண்டஸ்’ புயல், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்னும் சில மணி நேரத்தில் மாண்டஸ் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று நாளை நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 கிமீ முதல் 85 கிமீ வரை வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் இயங்காது
இந்த நிலையில், ‘மாண்டாஸ்’ புயல் கரையை கடக்கும் நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இரவு நேர பேருந்துகளை இயக்கக்கூடாது என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும், புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.