தஞ்சம் தேடி வெளியேறியவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது மனிதநேயமற்ற செயல் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தவிப்பு, மீட்பு
பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அந்த வகையில், குழந்தைகள், முதியவர்கள் என 306 இலங்கை அகதிகளுடன் படகு ஒன்று வந்துள்ளது. இந்த படகு நடுக்கடலில் வந்துகொண்டிருந்தபோது திடீரென பழுதாகி நின்றது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் இந்த கப்பல் பழுதானதால், செய்வதறியாது திகைத்த படகு ஓட்டுநர் கடலில் குதித்து தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து அதில் இருந்த அகதிகள், உதவிக்கோரி இலங்கை அரசுக்கு தகவல் அனுப்பினர். இதையடுத்து, இலங்கை அரசு அவர்களை காப்பாற்றுமாறு, சிங்கப்பூர் அரசுக்கு தகவல் கொடுத்தது. இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று உடனடியாக களத்தில் இறங்கிய சிங்கப்பூர் கடற்படை, படகில் தத்தளித்தவர்களை காப்பாற்றி வியட்நாமில் பாதுகாப்பாக கரை சேர்த்தது.
ஐ.நா.வின் கடமை
தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 306 ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; நடுக்கடலில் கப்பல் விபத்தில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்த போது சிங்கப்பூர் அரசால் மீட்கப்பட்டு, வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 306 ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது மனிதநேயமற்ற செயல். தஞ்சம் தேடி வெளியேறியவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாக அமைந்துவிடும். அதனால் தான் தங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஈழத்தமிழர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டியது ஐ.நா.வின் கடமை. அதை உணர்ந்து, ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டவாறு, 306 ஈழத்தமிழர்களுக்கும் அவர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தர ஐ.நா. அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.