ஒடிசா அருகே சாராயம் குடித்த போதையில் 24 காட்டு யானைகள் ஆழ்ந்து உறங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

சாராயம்

ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தினர் இலுப்பைப் பூ சாராயம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். தங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள முந்திரிக்காட்டுப் பகுதியில், பெரிய பெரிய பானைகளில் தண்ணீர் ஊற்றி அதில் இலுப்பைப் பூக்களை ஊறவைத்தனர். மறுநாள் காலையில் அதிலிருந்து ‘மக்குவா’ என்ற நாட்டு சாராயம் தயாரிப்பதற்காக அங்கு சென்ற கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

கும்பகர்ண யானைகள்

அந்தப் பானைகள் அனைத்தும் உடைந்து கிடக்க, அருகிலேயே 24 காட்டு யானைகள் கொண்ட ஒரு கூட்டம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. அவற்றை எழுப்புவதற்கு கிராம மக்கள் செய்த முயற்சி பலனளிக்காத நிலையில், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பெரிய மேளங்களை அடித்து சப்தம் எழுப்பினர். அதன்பிறகே அந்த யானைகள் உறக்கம் கலைந்து காட்டுக்குள் சென்றன. அவை போதையில்தான் உறங்கின என்று கூறமுடியாது, சாதாரணமாகக் கூட தூங்கியிருக்கலாம் என வன அலுவலர்கள் கூறுகின்றனர். ஆனால், சாராயப் பானைகள் எல்லாம் உடைந்து கிடந்த நிலையில், பக்கத்திலேயே யானைகள் படுத்திருந்தன. எனவே அவை நிச்சயம் சாராயம் குடித்திருக்க வேண்டும் என்று கிராமத்தினர் சொல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here