தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வரும் 8-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் மிக கனமழையும், தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களில் பரவலாகவும் மழை பெய்து வருகிறது. சென்னையில் இரு தினங்கள் மழை விட்ட நிலையில், நேற்று மாலை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு லேசான மழையும், ஒரு சில நேரங்களில் கனமழையும் பெய்தது. நள்ளிரவிலும் கனமழை தொடர்ந்து பெய்தது. கனமழையின் எதிரொலியாக கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை நீடிக்கும்
தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், வரும் 8-ம் தேதி வரை மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 8-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடி, மின்னலுடன் மழை
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று பகலில் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் பெய்யக்கூடும். வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, திருப்பூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.