பிறந்த குழந்தைக்கு திடீர் மூச்சுதிணறல் ஏற்பட்டதால் கோத்தகிரியில் இருந்து முன்னும், பின்னும் 6 ஆம்புலன்ஸ்கள் பாதுகாப்புடன் கோவைக்கு 68 நிமிடங்களில் ஆம்புலன்சை இயக்கிய டிரைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மூச்சு திணறல் 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சுவாச கோளாறு காரணமாக திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் மேல்சிகிச்சை அளிப்பதற்காக குழந்தையை உடனடியாக கோவைக்கு கொண்டு செல்ல வேண்டும் என குழந்தையின் பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மருத்துவர்கள் உதவியுடன் அங்குள்ள  தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்ததும், அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்தனர்.

உதவிய வாட்ஸ் அப் குரூப்

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹக்கீம், பெற்றோருடன் செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் உதவியுடன் குழந்தையை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு கோவைக்கு புறப்பட்டனர். ஆம்புலன்ஸ் புறப்படுவத்ற்கு முன்பே அதன் ஓட்டுநர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அடங்கிய தங்களது வாட்ஸ்அப் குரூப்பில், குழந்தையை சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்வது குறித்தும், மேட்டுப்பாளையம், காரமடை, கோவில்பாளையம், சரவணம்பட்டி உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பயணம் மேற்கொள்ள உதவி செய்யும்படியும் கேட்டுக்கொண்டார்.

பறந்த ஆம்புலன்ஸ்

இதன்படி ஆம்புலன்ஸ் மேட்டுப்பாளையம் வந்ததும், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குழந்தை கொண்டு வரப்பட்ட ஆம்புலன்சுக்கு முன்னும், பின்னும் தலா 3 ஆம்புலன்ஸ்களில் சைரன் ஒலி எழுப்பியவாறு கோவை வரை பாதுகாப்புடன் சென்றனர். இந்த தகவல் மேட்டுப்பாளையம், காரமடை பகுதி போக்குவரத்து போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்த அவர்களும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழிவகை செய்தனர். இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹக்கீம் 68 நிமிடத்தில் குழந்தையை கோவை கொண்டு சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு, பச்சிளம் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து குழந்தை அபாய கட்டத்தை தாண்டியது.

பாராட்டு

கோத்தகிரியில் இருந்து கோவைக்கு வழக்கமாக 2 மணி நேரம் பயணிக்கும் ஆம்புலன்சை, ஓட்டுநர் ஹக்கீம் 68 நிமிடத்தில் ஓட்டிவந்து குழந்தையின் உயிரை காப்பாற்றியதற்காக குழந்தையின் பெற்றோர் ஆனந்த கண்ணீருடன் அவருக்கு நன்றி தெரிவித்தனர். மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்களும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்ர் ஹக்கீமை வெகுவாக பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here