கேரளாவில் ஓணம் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு வென்ற ஆட்டோ ஓட்டுநர் நிம்மதி இழந்து தவிப்பதாக புலம்பி வருகிறார்.
பம்பர் பரிசு
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருபவர் அனூப். ஆட்டோ ஓட்டுநரான இவர், ரூ.50 கொடுத்து ஓணம் பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அதில் முதல் பரிசாக ரூ.25 கோடி விழ மகிழ்ச்சியில் திக்குமுக்காடியது அனூப்பின் குடும்பம். பொருளாதார நெருக்கடியால் பணம் சம்பாதிப்பதற்காக மலேசியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த அனூப்பிற்கு, ரூ.25 கோடி பரிசும், வாழ்த்து மழைகளும் பொழிந்ததால் ஒரே நாளில் கோடிஸ்வரர் ஆன அவர், சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்துள்ளார்.
நிம்மதி இல்லை
ஆனால் அவரது மகிழ்ச்சி நீட்டிக்கவில்லை. திருவனந்தபுரம் உள்ள அனூப்பின் வீட்டைத் தேடி வரும் பலர், அவரிடம் பண உதவி கேட்டுச் சென்றனர். லாட்டரியில் வென்றது ரூ.25 கோடி என்றாலும், வரியெல்லாம் போக அனுப்பிற்கு கிடைக்கப்போவது ரூ.15.75 கோடி தான். அதுவும் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை. ஆனால் அதற்குள் உற்றார் உறவினர் மற்றும் முகம்தெரியாதோர் என பலரும் பணம் கேட்டு அனூப் வீட்டு கதவை தட்டிக்கொண்டிருக்கின்றனர். வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக பணத்தை வைத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம் என நினைத்தால் நீ, நான் என போட்டி போட்டு உதவி கேட்டு பலரும் கரம் நீட்டுவதால், அவர் வெளியே செல்வதையே நிறுத்திவிட்டார். மாஸ்க் அணிந்து கொண்டு கூட எங்கேயும் செல்ல முடியவில்லை என வேதனைப்படும் அனூப், வீட்டிற்குள்ளேயே மாட்டிக் கொண்டது போல உணர்கிறோம் என கலங்குகிறார். பார்ப்பவர்கள் எல்லோரின் கண்களும் பணத்தையே தேடுவதால் வீட்டை மாற்றிக் கொண்டு போய்விடலாமா என நினைக்கத் தொடங்கிவிட்டாராம் அவர்.