மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதை அடுத்து பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கம்
வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மத்திய பசுபிக் கடற்கரை பகுதியில் நேற்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் குவிந்தனர். இந்த நிலநடுக்கம் கோலிமா மிச்சோகன் ஆகிய மாகாணங்களின் எல்லையில் இருந்து தென்கிழக்கே 37 கிலோ மீட்டர் தொலைவில், 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை
7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை அடுத்து மைக்கோகன் கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் பேரலைகள் எழுவதற்கான அறிகுறிகள் தென்படாததால் பின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருப்பதாக மெக்சிகோ சிட்டி காவல்துறை தெரிவித்திருக்கிறது.