வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மிக கனமழை
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று மிக கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, கரூர், திருச்சி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பதூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
4 நாட்களுக்கு மழை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், லட்சத்தீவு பகுதிகள், கேரள கடற்பகுதிகள் மற்றும் அதையொட்டிய தெற்கு கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இன்றும், நாளையும் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.