உதகை அருகே சிறுமியை கொன்ற சிறுத்தை ஒன்று வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
அடர்ந்த வனப்பகுதி
நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான வனப்பகுதிகள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் உணவு தேடி அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வழக்கம். 
சிறுமியை தாக்கிய சிறுத்தை
உதகை அடுத்த அரக்காடு எனும் பகுதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டம் உள்ளது. இங்கு வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நிஷாந்த் என்ற தொழிலாளியின் 4 வயது மகள் சரிதா, தேயிலைத் தோட்டப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்த சிறுத்தை ஒன்று சரிதாவை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரிதா பரிதாபமாக உயிரிழந்தார். 
சிக்கிய சிறுத்தை
சிறுமி சிறுத்தையால் தாக்கப்பட்டது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க அரக்காடு பகுதியில் 2 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டு, 10 கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இன்று அதிகாலை சிறுமியை கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. பிடிபட்ட சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகம் கொண்டு செல்லப்பட்டு, மாலை அடர்ந்த வனப்பகுதியில் விடப்படுகிறது.















































