சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் கவுண்டமணி ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்த படங்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக ‘ப்ரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தெலுங்கு பட இயக்குநர் அனுதீப் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் வெளிநாட்டு நடிகை நடித்து வருகிறார். ‘பிரின்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ‘எஸ்.கே 21’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். அதில் சாய் பல்லவி நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் திரையில்
‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘மாவீரன்’. அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு,பரத் சங்கர் இசையமைக்கிறார். ‘மாவீரன்’ படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. இப்படத்தில் காமெடி மன்னன் கவுண்டமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் பெரியப்பாவாக கவுண்டமணி நடிக்கவுள்ளார் என்றும் தகவல் வந்துள்ளது. மேலும் படத்தில் நடிக்க கவுண்டமணி சில நிபந்தனைகளை போட்டதாகவும், அதற்கு சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து சம்மதம் தெரிவித்ததால் கவுண்டமணி நடிப்பது உறுதி எனவும் தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் கவுண்டமணியை திரையில் காண உள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.














































