தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் – விக்னேஷ் சிவனும் இன்று திருமணம் செய்து கொண்டதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சம் பேருக்கு கல்யாண விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காதல்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான “நானும் ரவுடி தான்” திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். அப்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் – நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள், தங்களது ஜோடிப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதனை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் விக்னேஷ் – நயன்தாரா திருமணம் எப்போது என தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

திருமணம்

இந்த நிலையில், நயன்தாராவுக்கும் தனக்கும் ஜூன் 9-ம் தேதி திருமணம் நடைபெறும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அதன்படி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. சுமார் 10.25 மணியளவில் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். இவர்களது திருமணத்தில் நடிகர்கள் ஷாருக்கான், ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய்சேதுபதி, சரத்குமார், சூர்யா, கார்த்தி, இயக்குனர்கள் மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன், மோகன் ராஜா, அட்லி, தயாரிப்பாளர் போனி கபூர், இசையமைப்பாளர் அனிருத், ஏ.ஆர். ரஹ்மான் மகன் ஏ.ஆர்.அமீன் உள்பட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று புதுமண தம்பதியை வாழ்த்தினர்.

கட்டுப்பாடு

பெரும் கட்டுப்பாடுகளுக்கு நடுவே நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடந்தது. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நபர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன், கேமிரா உள்ளிட்டைவை கொண்டு செல்ல அனுமதி இல்லை. திருமணம் நடைபெற்ற ரெசார்ட்டை சுற்றி 100-க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாரம்பரிய உடை அணிந்து வருமாறு மணமக்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதையடுத்து, பிரபலங்களில் பலர் பாரம்பரிய உடையுடன் பங்கேற்றனர்.

கல்யாண விருந்து

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்து வழங்க மணமக்கள் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட கோயில்களில் 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்து அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here