உடல் நலக்குறைவு காரணமாக படுத்த படுக்கையாக இருப்பதாக கூறப்படும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா சிகிச்சைக்காக இந்தியா திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைலாச என்னும் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள சாமியார் நித்யானந்தா பற்றி பல்வேறு விதமான தகவல் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. நித்யானந்தாவின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்த நித்தியானந்தா, தான் நலமுடன் இருப்பதாக கூறினார். தற்போது அவர் மேலும் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டு இருக்கிறேன்”. விரைவில் உடலில் குடியேறி மீண்டு வந்து வழக்கமான சத்சங்களை மேற்கொள்வேன் என குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையே உடல்நலக் குறைவால் அவதியுற்று வரும் நித்தியானந்தா, மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது. வருகிற 14ம் தேதி பவுர்ணமி தினத்திற்கு முன்பாக நித்யானந்தா திருவண்ணாமலை வந்து சேருவார் என்றும் கூறப்படுகிறது.