அருண் மாதேஸ்வரன் – தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இளம் நடிகை
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி. தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த ‘உப்பெனா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிவரும் ‘தி வாரியர்’ படத்தில் நடிகர் ராம் போதினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “புல்லட்” பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ளது. இதனையடுத்து தமிழில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி.
தனுஷுடன் கூட்டணி
அருண் மாதேஸ்வரன் அடுத்து இயக்கவுள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆனதாக தகவல் வெளியானது. ஆனால் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால் தற்போது கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கீர்த்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் படக்குழு, விரைவில் அவரை ஒப்பந்தம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.