கடந்த 25 நாட்களாக மக்களை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திர வெயில் இன்றுடன் நிறைவடையும் நிலையில், சில தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்னி நட்சத்திரம்

ஆண்டுதோறும் கோடை காலத்தின் உச்சமான மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்குவது வழக்கம். இக்காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால் சமீபகாலமாக கத்திரி வெயிலுக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அக்னி நட்சத்திரம் கடந்த மே 4-ம் தேதி தொடங்கியதையடுத்து அனைத்து இடங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

கோடை மழை

அக்னி நட்சத்திர காலத்தில், அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் போன்ற காரணங்களால் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக மழை பெய்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. சென்னையில் அவ்வப்போது பெய்த கோடை மழை பொதுமக்களை மகிழ்ச்சியடையச் செய்தது.

சுட்டெரித்த வெயில்

அக்னி வெயில் காலத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டி மக்களை வாட்டி எடுத்தது.   சென்னையில் முக்கிய பகுதிகளான மீனம்பாக்கத்தில் நேற்று 102.38 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 100.94 டிகிரியும் வெப்பம் பதிவானது.  வேலூரில் அதிகபட்சமாக 105.9 டிகிரி வெப்பம் பதிவானது. இந்நிலையில், 25 நாட்கள் நீடித்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடை பெற்றாலும் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை தொடக்கம்

இன்றுடன் அக்னி நட்சத்திர காலம் முடியும் நிலையில், கேரளாவில் இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவ மழை துவங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கேரளாவில் இன்னும் இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவ மழை துவங்க சாதகமான சூழல் நிலவுவதாகவும், ஜூன் முதல் வாரத்தில் பருவ மழை துவங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில், வரும் 1ம் தேதி பருவ மழை துவங்கியதும், தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் வழியே, தமிழக பகுதிகளுக்கும் பருவ மழை விரிவடைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here