வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடி, மின்னலுடன் கனமழை
நாளை (மே 26), தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஓரளவு மேகமூட்டம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 9 செ.மீ., அரியலூர் 6 செ.மீ., பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.