தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கீழடுக்கு சுழற்சி

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய கனமழை

இதேபோல், மே 14-ம் தேதி (நாளை) முதல் 17-ம் தேதி (செவ்வாய்கிழமை) வரை சேலம், தருமபுரி, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், நாமக்கல், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் தேனி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மே 17-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேகமூட்டமாக இருக்கும்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 34 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் பதிவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்றும், நாளையும் (மே 13, 14) கேரளா, லட்சத்தீவு, குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கும், மே 15ல் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here